ஜெ.தீபாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் எதிர்ப்பு..

அப்போலோ மருத்துவமனையில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள ஆய்வில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பங்கேற்க ஆறுமுகசாமி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையை வருகிற 29-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளது.
 
இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பங்கேற்க அனுமதி கோரி, அவரது தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “போயஸ்கார்டனில் நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம், சட்ட ரீதியாக நானும் எனது சகோதரரும் தான் ஜெயலலிதாவின் உறவினராவோம்.
 
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அவரை சந்திக்க முயற்சி செய்தேன் என்னை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன. அதனால் தான் நான் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து பல ஆவணங்களையும் கொடுத்துள்ளேன்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்கைக் கூட எனது சகோதரர் தீபக்தான் செய்தார். எனவே சட்ட ரீதியாக எங்களுக்கு உரிமை உள்ளதால், நீதிபதி ஆறுமுகசாமி தம்மையும், தமது  வழக்கறிஞர்களையும் ஆய்வின் போது அனுமதிக்க வேண்டும்” என அந்த மனுவில் தீபா வலியுறுத்தியிருந்தார். 
 
மனுவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பதிலளித்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆய்வில் பங்கேற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபா  மனு குறித்து நாளை பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.

You'r reading ஜெ.தீபாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் எதிர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிறைவடைந்த மராத்தியர்கள் போராட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்