நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் புகுந்து 51 பேரை சுட்டுக் கொன்றவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறை

New Zealand mosque shooter sentenced to life without parole

கடந்த வருடம் மார்ச் 15ம் தேதி நியூசிலாந்து நாட்டில் ஒரு கருப்பு தினமாகக் கருதப்படுகிறது. பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நியூசிலாந்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்நாட்டைச் சேர்ந்த பிரென்டன் டாரன்ட் என்ற 29 வயது வாலிபரைக் கைது செய்தனர். சம்பவத்தன்று மதியம் 1.40 மணியளவில் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள அல்நூர் என்ற பள்ளிவாசலில் 400க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அங்கு காரில் வந்த டாரென்ட் தனது காரை பள்ளிவாசலுக்கு வெளியே நிறுத்தினார்.

இதன்பின்னர் பள்ளிவாசலின் முன் பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த அவர், அங்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது தனது எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினார். திடீரென துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் அதற்குள் பலர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தனர். இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய டாரென்ட் அருகில் உள்ள ஒரு இஸ்லாமிக் மையத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினார். இந்த இரு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை டாரென்ட் தன்னுடைய ஹெல்மெட்டில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவு செய்து நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உலகம் முழுவதும் இந்த காட்சியைப் பார்த்தவர்கள் கடும் பீதியடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தப்பிய டாரென்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு வெலிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கேமரூன் மான்டர், கொடும் குற்றவாளி டாரென்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். நியூசிலாந்து நாட்டைப் பொறுத்த அளவில் இது மிகக் கடுமையான தண்டனையாகும். தீர்ப்பை வழங்கிய நீதிபதி கேமரூன் கூறுகையில், 'உங்களுடைய இந்த கொடும் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தந்தையின் காலை பிடித்து நின்று கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையைக் கூட நீங்கள் எந்த மனசாட்சியும் இல்லாமல் கொன்று விட்டீர்கள்' என்றார்.

You'r reading நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் புகுந்து 51 பேரை சுட்டுக் கொன்றவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதயம் முரளி மகனுடன் பெண் இயக்குனர் திருமணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்