பிரபல கால் டாக்சி நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவற்றின் ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் முக்கிய நகரங்களில்ய வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல கால்டாக்சி நிறுவனங்களான ஓலா, உபேர் கீழ், நாடு முழுவதும் கார் மற்றும் ஆட்டோ சேவைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொது ஆட்டோக்களை விட இந்நிறுவனங்களின் ஆட்டோக்கள் சேவை விலை குறைந்து இருப்பதால் மக்கள் இவற்றையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்திற்கு ஏற்றவாறு அதன் ஓட்டுனர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை என்று ஓட்டுனர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
குறிப்பாக, ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் கால் டாக்ஸி ஓட்டுனர்களிடம் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்தாகவும், ஆனால், ஓட்டுனர்களுக்கு லாபத்தை அளிப்பதில்லை எனவும் ஓட்டுனர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், இரு நிறுவனங்களும் தாங்கள் சொந்தமாக வைத்துள்ள டாக்சிகளுக்கே முன் உரிமை அளிப்பதாகவும், இதனால் ஒப்பந்த முறையில் நிறுவனத்துடன் பணியாற்றும் கால் டாக்சிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, டாக்ஸி கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.