சௌத்வெஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த போயிங் 737 - 700 ரக விமானம் செவ்வாயன்று விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் பலியானார். இந்த விமானத்தின் எஞ்ஜின் சிஎஃப்எம் 56 - 7பி என்ற வகையை சேர்ந்தது. எஞ்ஜின் வெடித்து, அதிலிருந்து சிதறிய பாகம் விமானத்தை துளைத்ததுடன் ஜன்னலையும் உடைத்தது.
பென்சில்வேனியா பகுதிக்கு மேலாக பறந்தபோது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஆகவே, அது அவசரமாக பிலடெல்பியாவில் தரையிறக்கப்பட்டது. முதற்கட்ட ஆய்வில், விமான காற்றாடியின் இறக்கை உடைந்ததால் விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட காலம் பறந்த சிஎஃப்எம் 56 - 7பி என்ற வகை எஞ்ஜின்களை கொண்ட விமானங்களை பரிசோதனை செய்ய அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 220 ஜெட் விமானங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆய்வினை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆகஸ்ட் மாதம், சௌத்வெஸ்ட் நிறுவனத்தின் இதே வகை விமானத்தின் எஞ்ஜினின் பாகம் உடைந்து, இடது பக்க இறக்கையில் துளையை ஏற்படுத்திய விபத்து நிகழ்ந்தது. அப்போது விமானம் ஃப்ளோரிடாவின் பென்ஸகோலாவின் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த ஆண்டும், விமான காற்றாடிகளை ஆய்வு செய்து பழுதானவற்றை மாற்றும்படி விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.