38 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் சினிமா தியேட்டர்: முதல் படமாக பிளாக் பந்தர் ரிலீஸ்

Apr 20, 2018, 08:42 AM IST

சவுதி அரேபியாவில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்படத் தொடங்கின. 38 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் இங்கு, ஹாலிவுட் படமான ‘பிளாக் பந்தர்’ முதல் படமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா கட்டுப்பாடுகள் நிறைந்த நாடாகும். பெண்கள் பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்டது முதல் சினிமா தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. இதன் பிறகு, சவுதியில் சினிமா என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி கடந்த ஆண்டு பெண்கள் பைக் ஓட்ட அனுமதித்து சவுதி அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதைதொடர்ந்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அந்நாட்டில் சினிமாவுக்கு அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, அந்நாட்டு அரசின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும” என கூறப்பட்டது.

சினிமா மீதான தடை நீக்கப்படுவதால், பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி சவுதியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டது. முதல் தியேட்டரை இளவரசர் தொடங்கி வைத்தார். முதல் படமாக ‘பிளாக் பந்தர்’ என்ற ஹாலிவுட் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை மன்னர் குடும்பத்தினர் ரசித்து பார்த்தனர். மேலும், ஆயிரக்கணக்கான சவுதி மக்களும் ஆர்வத்துடன் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 38 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் சினிமா தியேட்டர்: முதல் படமாக பிளாக் பந்தர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை