கூகுள் தளம் புராண காலத்து நாரதர் முனிவர் போன்றது என குஜராத் முதல்வர் விஜய் ருபானி ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜவை சேர்ந்த மாநில முதல்வர்கள் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேவ் மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது என்றார். இது பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இவரை தொடர்ந்து, தற்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூகுள் தளத்தை நாரதர் முனிவரோடு ஒப்பிட்டு பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
சமீபத்தில், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான விஷ்வ சம்வத் கேந்திரா சார்பில் ஆகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தியது. இதில் கலந்துக் கொண்டு பேசிய விஜய் ருபானி, “கூகுள் தகவல்களை தரும் ஒரு ஆதார தளம். எனவே நாரத முனிவரையும் கூகுளுடன் ஒப்பிட்டு கூறலாம். ஏனென்றால், அவருக்கு உலகில் எந்த மூலையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் பற்றிய தகவல்களும் தெரியும்.
மகாபாரத காலத்தில் நாரத முனிவர் பலராமுக்கு (கிருஷ்ணரின் சகோதரர்) செய்திகளை தெரிவித்து வந்தார். இதேபோல், பல்வேறு காலகட்டங்களிலும் அவர் பலருக்கு தகவல்களை தெரிவித்து வந்தார்” என்றார்.
குஜராத் முதல்வர் விஜய் ருபானியின் சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.