பாஜகவினர் மற்றும் மோடிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதால் பாலிவுட்டில் எனக்கு பட வாய்ப்புகள் தருவதில்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவினருக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்திலும் மோடிக்கு எதிரான கேள்விகளை அவர் கேட்டு வருகிறார். இதனால், தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் மேற்கொண்டு கூறியதாவது: பத்திரிக்கையாளர் கவுரியின் மரணம் என்னை வேதனையில் ஆழ்த்தியது. அவர் எனது நெருங்கிய நண்பர். கவுரியின் குரல் எப்போது அடங்கியதோ அப்போது எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. நான் பேசத் தொடங்கிவிட்டேன். மோடியிடம் கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அவர் நேருவை பற்றியும், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை பற்றியும் பேசுகிறார்.
இதை எதிர்த்து கேள்வி கேட்டால் என்னை பாகிஸ்தானுக்கு செல் என்கின்றனர். இந்தியாவும் பாகிஸ்தான் போல் மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. மதம் நாட்டை ஆண்டால் இப்படித்தான் இருக்கும். மோடியை எதிர்ப்பதால் எனக்கு பாலிவுட் வாய்ப்புகள் வருவதில்லை. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னிடம் பணம் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், கட்சியோ, தேர்தலில் நிற்கபோவதில்லை. ஆனால், பாஜகவை வீழ்த்துவதே என் அரசியல். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.