ரஷ்யாவில் நடக்கப் போகும் கால்பந்து உலக கோப்பை போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸி ரசிகர், தனது வீட்டுக்கு அர்ஜென்டினா நாட்டின் கொடி கலரில் வண்ணம் பூசியுள்ளார். கொல்கத்தாவில் டீ கடை வைத்திருப்பவர் சிப் சங்கர் பத்ரா.
1986 ஆம் ஆண்டு, அர்ஜென்டினா கால்பந்து அணி, மாரடோனா தலைமையில் உலக கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது முதல் பத்ரா, மரோடானவின் தீவிர ரசிகர் ஆனார். இதனாலேயே, மாரடோனா விளையாடும் அணியான அர்ஜென்டினா பத்ராவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இப்போது மெஸ்ஸியையும் பிடித்துவிட்டதால், அவருக்கு அர்ஜென்டினா மீதுள்ள பாசம் தொடர்ந்து வருகிறது. அர்ஜென்டினா மீது தனது ஈடுபாடு குறித்து பேசும் பத்ரா, 'என்னைப் பொறுத்தவரை மெஸ்ஸி, மாரடோனாவின் நீட்சி என்று தான் கருதுகிறேன். மெஸ்ஸியை எனக்கும் என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.
அவரின் ஆட்டம் முதல் அவரின் குணம் வரை அனைத்துக்கும் ரசிகன் நான்' என்று மெஸ்ஸி குறித்து நெகிழ்கிறார். தனது வீட்டுக்குக் கீழேயே டீ கடை ஒன்றை வைத்துள்ளார் பத்ரா.