தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மாற்று திட்டத்தை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் நகராட்சிகளில் வீட்டிலிருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை, பாதாள சாக்கடைத் திட்டம் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், பல நகராட்சிகளில் இதற்கு மாற்றாக வேறொரு திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'சென்னையைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கும் 135 நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளிலும் மற்றும் 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடைத் திடம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. மேலும் 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் இருக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்' என்று தெரிவித்தார்.