2014 ஆம் ஆண்டு மோடி மே மாதம் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முதலில் ஐ.நா.சபையில் பேசும் போது யோகாவின் பெருமைகளை பற்றி உலக நாடுகளுக்கு எடுத்து கூறி, உலக யோகா தினம் கொண்டு வர கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதி வருடம் தோறும் உலக யோகா தினம் கடைப்பிடிக்க அறிவித்தது.
கடந்த 3 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச யோகா தினம் இந்த ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டப்படவுள்ளது.
ஆண்டு தோறும் பிரதமர் மோடி பங்கேற்றும் வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் இமாச்சலத்தின் தலைநகரான டேராடூனில் நடக்கவுள்ள மாபெரும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1250 ஏக்கர் நில பரப்பில் நடைபெற இருக்கும் இந்த நிலம் டேராடூன் வனத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமானது.
மேலும், யோகாவின் பெருமைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பா.ஜ.க வினர் மிகுந்த அக்கறை கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
டேராடூனில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்காக அப்பகுதிகளை தூய்மை படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜூன் 20ம் தேதி இரவு 9 மணியளவில் டேராடூன் செல்லும் பிரதமர் மோடி அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார். 21-ம் தேதி அதிகாலை வனத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் மோடி காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் வருகையொட்டி டேராடூன் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி டேராடூன் வனத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு ஜூன் 19, 20 தேதிகளில் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.