சென்னையைச் சேர்ந்தவர் சி.குமார். இவர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 3.50 லட்சம் மதிப்பிலான நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.
ஆனால், அதற்கான கடனத் தொகையை வட்டியும் அசலுமாகக் கட்டிமுடித்த பின்னரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய சொந்த நகைகளேயே மீட்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த வாடிக்கையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி டி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் கூற்றை முற்றிலுமாகக் கேட்டறிந்த நீதிபதி இன்னும் இரண்டு வார காலத்தில் வங்கி நிர்வாகிகள் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கு தொடர்ந்த சி.குமார் கடந்த 2010-ம் ஆண்டு 131 கிராம் தங்கத்தை அடகு வைத்து வங்கியில் இருந்து 1.23 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன் பின்னர் கூடுதலாக 138 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து மேலும் புதிதாக இரண்டு கடன்கள் எடுத்துள்ளார்.
பின்னர் 2011-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி 131 கிராம் தங்க நகைகளை சரியான தொகையை வட்டியுடன் செலுத்தி மீட்டுள்ளார். அடுத்து வாங்கிய இரண்டு தங்க நகைக் கடன்களையும் அடுத்தடுத்து வட்டியுடன் செலுத்திவிட்டு தன் நகையைத் திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால், அவரது இரண்டு கடன்களிலும் 1 ரூபாய் மீதம் கடன் உள்ளதாகக் கூறி கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு நகையை திரும்ப அளிக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது அந்த வங்கி.