சைவ உணவு சாப்பிடுவதற்காக கீரை வாங்கி சென்ற பெண், அதனுள் உயிருடன் இருந்த தவளையை கண்டு அதிர்ச்சியுற்றார். ஐரோப்பாவில் கார்ன்வால் என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கார்ன்வால் என்ற பகுதியில் ரெட்ரூத் என்ற இடத்தில் ஆல்டி (Aldi) என்ற புகழ்பெற்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு சேவகான் டோல்புட் என்ற பெண், இங்கு சாலட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை கீரையான இலைகோசினை (lettuce) வாங்கியுள்ளார். 37 வயது பெண்ணான சேவகான், சைவ உணவு பழக்கத்தினை பின்பற்றி வருகிறார்.
வீட்டுக்குச் சென்று கீரைக்கட்டினை பிரித்த அவர், உள்ளே உயிருடன் சிறிய தவளை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அதை வீடியோ எடுத்து, டிவிட்டரில், "கீரைக்கட்டுக்குள் தவளை இருந்தால் என்ன செய்வது?" என்று தலைப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இதை அறிந்த ஆல்டி நிறுவனம், தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, சேவகானுக்கு பணத்தை திரும்ப அளிப்பதாகவும் கூறியுள்ளது. தவளையை பார்த்த சேவகான், உதவிக்கு தன் கணவரை அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அதனை ஓர் ஓடையருகில் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.