சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டி அருகே பெற்றோர் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி விமலாதேவி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி கணவர் திலீப்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்காத காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் புகார்களை கவனிக்க தனிப்பிரிவை ஏற்படுத்தவும், புகார்களை பெற 24 மணி நேர பிரத்யேக இலவச தொலைப்பேசி வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட்டது.
தம்பதிகளை பாதுகாப்பதுடன் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்திய உயர் நீதிமன்ற நீதிபதி, ஆணவக் கொலைகளை ஒடுக்க போதிய நிதி ஒதுக்கி, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு போதிய இருப்பிட வசதி ஏற்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்கு அமல்படுத்தவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் 2017-ஆம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்துவரும் நிலையில், தமிழக உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விமலாதேவி வழக்கில் சம்பந்தப்பட்ட அப்போதைய செக்காணூரனி காவல் ஆய்வாளர் சுகுமார், உசிலம்பட்டி உதவி ஆய்வாளர் ராணி, வத்தலகுண்டு ஆய்வாளர் வினோஜ், துணை ஆய்வாளர் ஆனந்தி ஆகியோரின் ஊதிய உயர்வை மூன்றாண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் 24 மணி நேர அடிப்படையில் 1091, 1077 உள்ளிட்ட உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.