அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளும் ஆய்வில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையை வருகிற 29-ஆம் தேதி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “போயஸ்கார்டனில் நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம், சட்ட ரீதியாக நானும் எனது சகோதரரும் தான் ஜெயலலிதாவின் உறவினராவோம்.
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அவரை சந்திக்க முயற்சி செய்தேன் என்னை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன, அதனால் தான் நான் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து பல ஆவணங்களையும் கொடுத்துள்ளேன்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்கைக் கூட எனது சகோதரர் தீபக்தான் செய்தார். எனவே சட்ட ரீதியாக எங்களுக்கு உரிமை உள்ளதால், நீதிபதி ஆறுமுகசாமி என்னையும் எனது வழக்கறிஞர்களையும் ஆய்வின் போது அனுமதிக்க வேண்டும்” என தீபா வலியுறுத்தியுள்ளார்.
“ஆய்வுக்கான உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் நீதிபதி விருப்பப்பட்டு ஆய்வின் போது தன்னை அனுமதிக்க வேண்டும்" எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.