அமெரிக்க குடியுரிமை - விசித்திர தீர்ப்பு

by SAM ASIR, Jul 24, 2018, 22:57 PM IST
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்து, 2007-ம் ஆண்டு குடியுரிமைக்கான உறுதிமொழி எடுத்து இயல்பாக பெண் ஒருவர் பெற்ற குடியுரிமையை ரத்து செய்து (denaturalization) அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நோர்மா போர்கோனா என்ற பெண் 1989-ம் ஆண்டு பெரு நாட்டிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். மியாமி புறநகர் பகுதியில் வசித்து வந்த அவர், நிறுவனம் ஒன்றில் அதிகாரிக்கு செயலராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியிலுள்ள தேவாலய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நோர்மாவுக்கு பேத்தி பிறந்துள்ளாள்.
 
நோர்மா வேலை செய்த அதிகாரி, அமெரிக்க வங்கி ஒன்றில் 24 மில்லியன் டாலர் மோசடி செய்த குற்றத்தில் சிக்கியுள்ளார். 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் நோர்மாவையும் அந்த வழக்கில் இணைத்துள்ளார்கள். குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது, தான் குற்றச்செயலில் ஈடுபட்டதை நோர்மா மறைத்துள்ளதாக இப்போது நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நோர்மா, தன் தேவைக்காக எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. தனது அதிகாரி தவறு செய்வது அவருக்கு தெரிந்திருக்குமா என்பது உறுதியாகவில்லை.
 
இயல்பான முறையில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் 2 கோடியே 12 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் தவறான அடையாளம் கொடுத்துள்ளார்களா, தீவிரவாத தொடர்பு உள்ளதா, போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா, மோசடி செய்துள்ளார்களா என்று இப்போது விசாரணை செய்து வருகிறார்கள்.
 
டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் இயல்பாக குடியுரிமை பெற்றவர்கள் தீவிர கண்காணிப்புக்குள்ளாகியுள்ளார்கள். அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை (USCIS)இதற்கென புதிய அலுவலகம் ஒன்றையும் திறக்க உள்ளது. குடிபுகல் மற்றும் சுங்க அமலாக்க துறை புதிதாக 300 புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க 207 மில்லியன் டாலர் ஒதுக்கீடு கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அமெரிக்க குடியுரிமை - விசித்திர தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை