டிரம்ப் மகள் வியாபாரத்துக்கு முழுக்கு

by SAM ASIR, Jul 26, 2018, 08:36 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகள் இவாங்கா டிரம்ப், தாம் நடத்தி வரும் 'இவாங்கா டிரம்ப்' ஆடை மற்றும் ஆடை சார்ந்த பொருட்கள் நிறுவனத்தை (fashion brand) மூடுவதாக அறிவித்துள்ளார்.
டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிபர் பதவியை தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
டொனால்டு டிரம்ப்பின் எதிர் தரப்பினர், இவாங்கா நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். மார்ஷல்ஸ், நார்ஸ்டாம் மற்றும் டி.ஜெ.மேக்ஸ் உள்ளிட்ட சில்லறை வணிக நிறுவனங்கள் இவாங்கோ டிரம்ப் நிறுவன பொருட்களை விற்பதை நிறுத்தி விட்டன. கனடாவின் சங்கிலி விற்பனை நிறுவனமான
 
ஹட்ஸன் பே கம்பெனியும் அப்பொருட்களை விற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ள நிலையில், இவாங்கோ டிரம்ப் (Ivanka Trump) நிறுவனத்தின் பல்வேறு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது அதிபர் மாளிகையில் முதுநிலை ஆலோசகராக பணியிலிருக்கும் இவாங்கா, "நான் வாஷிங்டனுக்கு வந்து 17 மாதங்கள் ஆகின்றன. எப்போது வியாபாரத்திற்கு திரும்ப முடியும் என்று தெரியவில்லை. என்னுடைய பங்குதாரர்களுக்கும் குழுவினருக்கும் சரியான முடிவை தெரிவிக்கும் வண்ணம் நான் வியாபாரத்திலிருந்து விலகி கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
 
இவாங்கா டிரம்ப் நிறுவனத்தின் தலைவர் அபிகாயில் க்ளெம், "அதிபர் விதித்த வரிக்கும் இந்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இருப்பில் இருக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். புதிதாக பொருட்கள் தயாரிக்கப்படாது. நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கப்படாது. பணியாளர்களுக்கு நிறுவனம் மூடப்படுவது குறித்து உரிய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

You'r reading டிரம்ப் மகள் வியாபாரத்துக்கு முழுக்கு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை