தமிழகத்தில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, விசாரணை நடத்துவதோடு, பல்வேறு இடங்களில் உள்ள சிலைகளை மீட்டும் வருகிறார். மீட்கப்படும் சிலைகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்படுகின்றன. சிலவற்றை ஐஜி பொன்.மாணிக்கவேல் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து வருகிறார்.
இருப்பினும், மீட்கப்படும் சிலைகளை பாதுகாப்பு அறைகளில் வைக்காமல் சம்பந்தப்பட்ட கோவில்களிடம் ஒப்படைக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், 15 சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்க தலா 90 லட்சம் ரூபாய் முதல் 95 லட்சம் ரூபாய் வரை அறநிலையத்துறை ஒதுக்கியுள்ளது... இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் தலைமையில் இரண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த, சிறப்பு அமர்வு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு, இரண்டு வாரங்களில் இந்துசமய அறநிலையத்துறைக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.