திமுக தலைவர் கருணாநிதி மேலும் 2 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
உடல் நலம் குன்றியுள்ள கருணாநிதிக்கு அவரது கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காவேரி மருத்துவமனையில் மூச்சுக்குழாய் மாற்றப்பட்டது. பின்னர் புதன் கிழமையன்று அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் கேட்டறிந்தனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாநிதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். ஆளுநர் தொடங்கி அதிமுக முன்னணி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் நாகரீகம் வளர்ந்திருப்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.
இந்நிலையில், கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., டிகேஎஸ் இளங்கோவன், காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையில் கருணாநிதி 2 நாட்கள் இருப்பார் என்று கூறியுள்ளார்.
ரத்த அழுத்தம் சீராகி கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என அவரது மகளும் எம்.பி.யுமான கனிமொழியும் தெரவித்திருக்கிறார். கருணாநிதி பழுத்த நாத்திகவாதியாக இருந்தாலும், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், அவ்வப்போது வெளியாகும் சில செய்திகள் திமுக தொண்டர்களை பதற்றத்துக்கும் கலக்கத்துக்கு ஆளாக்குகிறது. வெளியாகும் செய்திகள் வதந்தி, அதை நம்ப வேண்டாம் என திமுக முன்னணி தலைவர்கள் சொன்னாலும், கருணாநிதியின் முதுமையும், 2 ஆண்டுகளாக அவர் உடல் நலன் குன்றியிருப்பதும் தொண்டர்களை பதற்றத்திலேயே வைத்துள்ளது.
பதற்றத்தை தணித்துவிட்டு பின்னர் அறிவிக்கலாம் என தலைவர்கள் நினைக்கிறார்களா என்று தொண்டர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். வாஞ்சையான குரலில் ‘எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என கருணாநிதி கூறுவதை மீண்டும் கேட்க வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.