Sunday, Dec 5, 2021

கர்ப்பிணிகளே கட்டிகளால் கவலை வேண்டாம்! சுகப்பிரசவம் இனி ஈஸி

by Isaivaani Jan 31, 2018, 10:27 AM IST

உடலில் சிறிய கட்டி தோன்றினாலே கலவரம் அடையும் காலம் இது. கட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ, இல்லை, இப்போது சாதாரணமாகத் தெரிந்தாலும், பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம் மனசுக்குள் பதற்றம் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது.

நிலைமை இப்படி இருக்கும்போது கருப்பையில் கட்டி தோன்றினால் கவலைப்படாமல் இருக்க முடியுமா? அதிலும் கர்ப்பம் ஆன பிறகு அங்கே கட்டி தோன்றிவிட்டால், பிரசவம் ஆகும் வரைக்கும் அந்தக் கர்ப்பிணிக்கு அச்சம் ஏற்படாத நாளே இருக்காது.

சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கே பயந்துபோய் ‘கருக்கலைப்பு செய்துவிடலாம்’ என முடிவு செய்கிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். அப்படியானால், ‘கருப்பையில் கட்டி இருக்கிறது’ என்று தெரிந்ததும், கர்ப்பிணிகள் இதே முடிவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை... ஆனால், அது அவசியமுமில்லை!

கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும் ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

கட்டியின் வகைகள்

இது கருப்பையில் நான்கு இடங்களில் தோன்றுவது வழக்கம்.
1. கருப்பையின் உட்சவ்வை ஒட்டி வளர்வது ஒரு வகை (Submucous fibroid).
2. கருப்பைத் தசைகளுக்கு இடையில் வளர்வது மற்றொரு வகை (Intramural fibroid).
3. கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளர்வது மூன்றாம் வகை (Subserous fibroid).
4. கருப்பை வாய்ப்பகுதியில் தோன்றும் கட்டிகள் கடைசி வகை (Cervical fibroid).

என்ன அறிகுறிகள்?

அடிவயிற்றில் வலி ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டாலே சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அடி வயிறு சிறிது பெரிதாகவும் தெரியலாம். லேசாக காய்ச்சல், வாந்தி, முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் அடைத்துக் கொள்ளுதல், மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

எப்படி கண்டுபிடிப்பது?

மகப்பேறு மருத்துவர் கர்ப்பிணியின் வயிற்றைத் தொட்டுப் பரிசோதிக்கும்போது, கர்ப்ப நாட்களுக்கு அதிகமாக வயிறு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால், சந்தேகத்தின் பேரில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளச் சொல்வார். அதில் ‘நார்த்திசுக் கட்டி’ இருப்பது தெரியும்.

கட்டி எந்த இடத்தில் உள்ளது, அளவு என்ன, எத்தனை கட்டிகள், பிரசவத்துக்குத் தொந்தரவாக இருக்குமா என பல தகவல்களை அதில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப கர்ப்பிணிக்குத் தேவையான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் என்ன பாதிப்பு?

எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.

எப்படி கவனிப்பது?

கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, கட்டியின் வளர்ச்சிப்போக்கைத் தொடர்ந்து கவனித்து வந்தால், சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கட்டியானது கர்ப்பிணிக்கு அல்லது சிசுவுக்கு ஆபத்துஏற்படுத்துகிறது எனும்போது மட்டுமே மற்றசிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

பொதுவாக, இந்தக் கட்டியில் ‘சிவப்புச் சிதைவு’ (Red degeneration) எனும் கடுமையான விளைவு ஒன்று ஏற்படும். அப்போது சிசேரியன் தேவைப்படும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போதும், கருப்பையின் உள்ளே இருக்கும் கட்டி பிரசவ நேரத்தில் குழந்தையை கர்ப்பிணியின் இடுப்புக்குழிக்கு இறங்கவிடாமல் தடுக்கும்போதும், குழந்தையின் நிலை இயல்பாக இல்லாமல், குறுக்காக அல்லது ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடக்கும்போதும், சிறிய கட்டியாகவே இருந்தாலும் அது கருப்பை வாய்ப் பகுதியில் தோன்றும்போதும் சிசேரியன் தேவைப்படும்.

சினைப்பைக் கட்டி பயப்பட்டே தீர வேண்டிய கட்டி என்று பார்த்தோமல்லவா? அது சினைப்பைக் கட்டிதான் (Ovarian tumor). இதில் திடக் கட்டி, நீர்க் கட்டி, சாதாரணக் கட்டி, புற்றுநோய்க் கட்டி எனப் பல வகை உண்டு. கட்டியின் அளவு, எண்ணிக்கை, வகை, கர்ப்பகாலம் ஆகியவற்றைப் பொறுத்து பிரச்னை ஆரம்பமாகும்.

‘கார்ப்பஸ் லூட்டியம்’ (Corpus luteum) என அழைக்கப்படும் சினைப்பை பகுதியில் - அதாவது, சினைமுட்டை கருத்தரிப்புக்காக வெளியேறிய பிறகு மீதமுள்ள சினைப்பை பகுதியில் சின்னதாக கட்டி தோன்றலாம்.

கர்ப்பிணியின் முதல் செக்கப்பில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் தெரியும் இந்தக் கட்டி, பெரும்பாலும் முதல் டிரைமெஸ்டரிலேயே கரைந்துவிடும். அதனால், இந்தக் கட்டி குறித்து பயப்படத் தேவையில்லை. இரண்டாம் டிரைமெஸ்டரில் மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்து இதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சினைப்பையில் ஏற்படும் மற்ற கட்டிகளும் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியையும் வெளிக்காட்டுவதில்லை. ஸ்கேன் பரிசோதனையில் மட்டுமே அவை தெரியும் அல்லது போகப்போக அடிவயிறு பெரிதாகத் தெரியும்.

கட்டியானது கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையை அழுத்தும் என்பதால், கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். சிலருக்கு கட்டி திடீரென்று திருகிக்கொள்ளும். அப்போது வயிற்று வலி கடுமையாக இருக்கும். அந்த நிலைமையில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டியது வரும்.

You'r reading கர்ப்பிணிகளே கட்டிகளால் கவலை வேண்டாம்! சுகப்பிரசவம் இனி ஈஸி Originally posted on The Subeditor Tamil

More Aval News