2000 கோடி முறைகேடு எதிரொலி:பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா கிளைகள் மூடல்

by SAM ASIR, Oct 4, 2018, 18:17 PM IST

அக்டோபர் 1ம் தேதி முதல் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா தனது 51 கிளைகளை மூடியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்துறை வங்கி ஒன்று இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

பூனாவை தலைமையிடமாக கொண்ட மஹாராஷ்டிரா வங்கிக்கு இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1,900 கிளைகள் உள்ளன. பூனாவிலுள்ள டிஎஸ்கே குழுமம் என்னும் டி.எஸ்.குல்கர்னியின் நிறுவனம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து 2,043 கோடி முறைகேட்டில் ஈடுபட்டு வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக மஹாராஷ்டிரா வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த ரவீந்திர மராதே உள்பட ஐந்து அதிகாரிகளை மஹாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிய பதியப்பட்ட இவ்வழக்கில் 36,875 பக்க குற்றப்பத்திரிகையை பூனா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்த நிலையில் ஜூன் 29ம் தேதி, தலைவர் மராதே மற்றும் செயல் இயக்குநர் ஆர்.கே.குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பொறுப்பிலிருந்து நிர்வாகம் விடுவித்தது. கடந்த திங்கள் அன்று பொது மக்களின் வசதிக்காக 51 கிளைகளை மூடி, மற்ற கிளைகளுடன் இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தானேயில் 7, மும்பையில் 6, பூனாவில் 5, ஜெய்பூரில் 4, நாஸிக் மற்றும் பெங்களூரு நகரங்கள் ஒவ்வொன்றிலும் 3 கிளைகள், அம்ராவரி, லட்டூர், ஔரங்காபாத், ஜல்கான், நாக்பூர், சடாரா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் 2 கிளைகள், நொய்டா, கொல்கத்தா, சண்டிகார், ராய்ப்பூர், கோவா, சோலாப்பூர், கோலாப்பூர் ஆகிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் 1 கிளை உள்பட மொத்தம் 51 கிளைகளை பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா மூடியுள்ளது.

இந்த 51 கிளைகளுக்கான பரிவர்த்தனை குறியீட்டு எண்களான IFSC மற்றும் MICR எண்கள் முடக்கப்பட்டு, கிளைகளின் சேமிப்பு, நடப்பு உள்ளிட்ட அத்தனை கணக்குகளும் இணைக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட பரிவர்த்தனை குறியீட்டு எண்கள் கொண்ட காசோலை புத்தகங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்ப சமர்ப்பித்து, புதிய கிளைகளுக்கான குறியீட்டு எண்கள் கொண்ட காசோலைகளை வாங்கிக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த குறியீட்டு எண்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குப் பின் நிரந்தரமாக ரத்து செய்யப்பட இருப்பதால், வாடிக்கையாளர்கள் எந்தப் பரிவர்த்தனைக்கும் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா கேட்டுக்கொண்டுள்ளது.

You'r reading 2000 கோடி முறைகேடு எதிரொலி:பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா கிளைகள் மூடல் Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை