ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னை வந்திறங்கினார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவினர் தனியாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் புறப்பட்டு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து அவர் விழா நடைபெறும் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்திற்கு சென்று விழாவில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு, அடுத்து ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்பு, பிரதமர் மோடி பேசியதாவது:
நான் அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கிறேன். அங்கு பல்வேறு தலைவர்கள், முதலீட்டாளர்கள் உள்பட பலரையும் சந்தித்தேன். எல்லோரிடமும் நான் பேசியது, புதிய இந்தியாவை உருவாக்குவது பற்றியும், இந்திய இளைஞர்களின் திறமைகளைப் பற்றியும்தான்.
தமிழ்நாட்டிற்கு தனிச் சிறப்பு உண்டு. உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் பிறப்பிடம் என்பதுதான். இந்த தலைசிறந்த நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெருமிதம் அடைகிறேன். ஐஐடியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் பெரும் தியாகத்தை செய்துள்ளனர். பெற்றோரின் தியாகத்தால்தான் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைகின்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நாம் ஊழியர்களுக்கு மாணவ, மாணவிகள் எழுந்து நின்று கைதட்ட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதும் மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பட்டம் பெற்ற மாணவர்கள் உள்பட விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று, பிரதமருடன் சேர்ந்து கைதட்டினர்.