சீனாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ள பிரச்னைகளை பேசி தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழு அமைப்பதற்கு மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு செய்யப்பட்டது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்க் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அவர் நேரடியாக சென்னைக்கு நேற்று(அக்.11) வந்தார். சென்னை ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர் நேற்று மாலையில் காரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு பகுதிக்கு சென்றார்.
அங்கு முன்னதாகவே பிரதமர் மோடி வந்திருந்தார். பிரதமர் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து சுத்த தமிழராக மாறியிருந்தார். ஜின்பிங் அங்கு வந்து சேர்ந்ததும் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அவர்கள் இருவரைத் தவிர இந்தியாவுக்கான சீன தூதர் சன்வெய்டாங், சீனாவுக்கான இந்திய தூதர் மதுசுதன் ரவீந்திரன் ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர். அவர்கள், இருபெரும் தலைவர்களுக்கு இடையே மொழிப் பெயர்ப்பாளர்களாக பணியாற்றினர்.
அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இருவரும் பார்வையிட்டு, பல்லவர்கால சிற்பங்களை ரசித்தனர். பின்னர், கடற்கரை கோவில் அருகே அமைக்கப்பட்ட அரங்கத்தில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பின்னர், இரவு விருந்து முடித்து கொண்டு, ஜின்பிங் சென்னை ஓட்டலுக்கு திரும்பினார். மோடி, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இன்று காலையில் ஜின்பிங், கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவரும் பிரதமர் மோடியும் தனியாக சந்தித்து பேசினர். பின்னர், இரு நாட்டு குழுவினருடன் அமர்ந்து பேசினர். இந்த கூட்டத்தில் மோடி பேசும் போது, இருநாட்டு நல்லுறவுகளில் புதிய அத்தியாத்தை துவங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
சீன அதிபர் ஜின்பிங்க் பேசுகையில், நீங்கள் மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளீர்கள். எனக்கும், எங்கள் நாட்டு குழுவினருக்கும் சிறப்பான விருந்தோம்பல் செய்தீர்கள். இந்த தினத்தை நாங்கள் மறக்கவே முடியாது. பிரதமர் மோடியுடன் நண்பராக இதயப்பூர்வமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டேன் என்று குறிப்பிட்டார்.
இதன்பின், இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான பிரச்னைகளில் தீர்வு காண்பதற்காக உயர்மட்டக் குழு அமைத்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், சீன துணை அதிபர் ஹு சுன்ஹுகாவும் இடம்பெறுவார்கள். மேலும் இருநாட்டு அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். இந்த குழு வர்த்தகப் பற்றாக்குறையை தீர்ப்பது உள்ளிட்ட பிரச்னைகளையும் விவாதித்து முடிவெடுக்கும்.