போக்குவரத்து விதிமீறல்.. ஒரே வாரத்தில் 35000 வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை

by எஸ். எம். கணபதி, Dec 13, 2019, 11:04 AM IST

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தி.நகர், பாரிமுனை உள்பட வர்த்தக மையங்களாக விளங்கும் இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. பெரும்பாலான நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் வாகன நிறுத்துமிடங்கள் கிடையாது. இதனால், பொது மக்கள் தங்கள் பைக், கார்களை நோ பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் இதை கண்டு கொள்வதில்லை. சில சமயங்களில் வண்டியை எடுத்து கொண்டு போய் விடுவார்கள்.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த வாரம், ஷாப்பிங் மால், ஜுவல்லரிகள், ஜவுளிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர். வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், தங்கள் வாடிக்கையாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் கவனித்து கொள்ள வேண்டுமென்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதன்பின், போக்குவரத்து போலீசார் 73 சிறப்பு டீம்களை அமைத்து, தி.நகர் உள்பட முக்கிய இடங்களில் தொடர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில், வடக்கு மண்டலத்தில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் சராசரியாக 3 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஒரு வாரத்தில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் எடுத்து சென்ற பின், உரிமையாளர்கள் ஸ்டேஷனுக்கு சென்று அபராதம் கட்டி வண்டிகளை மீட்க வேண்டும். அபராதம் ரூ.100 என்றால், அதை எடுத்து சென்ற கட்டணமாக ரூ.325 சேர்த்து வசூலித்துள்ளனர். இத்தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


அதிகம் படித்தவை