நிவர் புயல் கரை கடந்தது : சென்னையில் பெரிய பாதிப்பு இல்லை

by Balaji, Nov 26, 2020, 10:20 AM IST

இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. சென்னையில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன.

தண்டையார்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரே குளம் போலக் காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் அருகே பிரதான சாலை, ஆறு போலக் காட்சியளிக்கிறது. சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் அவற்றில் பயணித்தோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கனமழையால் மாநகரின் பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வடக்கு வாசல் அருகே சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எழும்பூர் - சென்ட்ரல் இடையே போக்குவரத்து தடைப்பட்டது.வானகரம் பூச்சந்தை குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் பூ வியாபாரம் தடைப்பட்டது.திருவொற்றியூரில் ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள மகாவீரர் நகர்ப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர்.நெய்வேலி என்எல்சியின் 3 திறந்தவெளி சுரங்கங்களிலும் மழை நீர் தேங்கி நிற்பதால், நிலக்கரி எடுக்கப்படும் பணிகள் தடைப்பட்டது. சேமிப்பில் உள்ள நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தரைப்பாலத்தைத் தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.சென்னையில் ஒரே நாளில் 67 மரங்கள் விழுந்துள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளன.அதே சமயம் நிவர் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப் பட்டுள்ளன.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.487 ஏரிகள் 91 முதல் 99 சதவீதமும், 876 ஏரிகள் 81 முதல் 90 சதவீதமும், 834 ஏரிகள் 71 முதல் 80 சதவீதமும், 1,481 ஏரிகள் 51 முதல் 70 சதவீதமும் நிரம்பியுள்ளன.

2,073 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 4,919 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது.1,772 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.அதிகபட்சமாக 2,040 ஏரிகள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 392 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள417 ஏரிகளில் 70, சென்னை மாவட்டத்தில் 28 ஏரிகளில் 2, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 78, மதுரை மாவட்டத்தில் 1,340 ஏரிகளில் 242, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,131 ஏரிகளில் 36, தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 226 ஏரிகள் நிரம்பியுள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,460 ஏரிகளில் ஒரு ஏரிகூட நிரம்பவில்லை.

அரியலூர், தருமபுரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு ஏரி கூட 100 சதவீதம் நிரம்பவில்லை.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏரி மட்டும் 100 சதவீதம் நிரம்பியுள்ளது என்று பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading நிவர் புயல் கரை கடந்தது : சென்னையில் பெரிய பாதிப்பு இல்லை Originally posted on The Subeditor Tamil

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை