போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துளார்.
தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக அதிகமாக பேசப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டா. `பெல்லி சூப்புலு', `அர்ஜுன் ரெட்டி', `கீதா கோவிந்தம்', `டாக்ஸிவாலா' உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களால் டோலிவுட்டில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். மேலும் நோட்டா படம் மூலம் தமிழிலும் கவனம் பெற்றவர். `ரவுடி' என அழைக்கப்படும் இவருக்கு கேர்ள் பேன்ஸ் ஜாஸ்தி. தனது எதைப்பற்றியும் கவலைப்படாத நடவடிக்கையின் மூலம் ரவுடி நடிகர் என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் தான் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் இளம் சாதனையாளர்கள் கொண்ட `30 அண்டர் 30' பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு இந்திய நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் தேவரகொண்டா. இதே தேவரகொண்டா சென்ற வருடம் வெளியான அதிகம் சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் 72 இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ் இதழில் தன் பெயர் வந்துள்ளது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தேவரகொண்டா, ``25 வயதில் ஆந்திரா வங்கியில் 500 ரூபாய் இல்லை என்று அக்கவுண்ட் முடக்கிவிட்டார்கள். இதனால் 30 வயதுக்குள் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று அப்பா கூறுவார்.பெற்றவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே செட்டில் ஆகிவிட்டால் பின்னாளில் சந்தோஷமாக இருக்க முடியும் என்று அவர் கூறுவார்.
அவர் சொன்ன நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது நான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30ல் இருக்கிறேன்" என்று நெகிழ்ந்துளார். இவரின் பதிவு தற்போது வைரலாகிவருகிறது.