`நல்லவர்கள் சூழ் உலகு விவசாயமே அழகு - `கண்ணே கலைமானே படம் விமர்சனம்!

udhayanidhi stalins kanne kalaimaane movie review

by Sasitharan, Feb 23, 2019, 19:37 PM IST

விவசாயத்தின் மீது காதல் கொண்டு விவசாயத்தையும், அதேநேரம் உறவுகளையும் நேசிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கருவாக கொண்டதே `கண்ணே கலைமானே' திரைப்படம்.

இயற்கை எழில்கொஞ்சும் சோழவந்தான் ஊரில் வாழும் உத்தம இளைஞர் (மனிதர்) கமலக்கண்ணனாக உதயநிதி வருகிறார். உதயநிதி இருக்கும் சோழவந்தான் ஊருக்கே பேங்க் ஆபிஸராக மாற்றலாகி வருகிறார் பாரதி என்னும் ஹீரோயின் தமன்னா. இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல், காதல், திருமணம் மிச்சம், சொச்சம் தான் `கண்ணே கலைமானே'.

விவசாயத்தின் மீதும், தன் மண்ணின் மீதும்கொண்ட பெருங்காதலால் இயற்கை விவசாய படிப்பை முடித்துவிட்டு மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார் உதயநிதி. அத்துடன் ஊரில் உள்ள மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீதான பற்றையும், அவர்களுக்கு லோன் வாங்கித்தருவது, முதியோர் இல்லம் திறக்க உதவுவது என இக்கால இளைஞர்களுக்கு நேர் எதிராக காட்சிக்கு காட்சி உத்தம இளைஞராக வாழ்ந்திருக்கிறார் உதயநிதி. யதார்த்தமான நடிப்பு, எளிமையான மனிதனாக அப்படி இருக்கிறார். கண்டிப்பாக நிமிர் படத்தில் வித்தியாசமான உதயநிதியை பார்த்தவர்கள் இதிலும் பார்க்கலாம்.

படத்தின் ஹீரோ என்னவோ உதயநிதி தான் என்றாலும் தமன்னாவை சுற்றித்தான் கதை நகரும் ஒரு பீலிங். நிச்சயம் மீண்டும் தமன்னாவுக்கு இது ஒரு பேசும்படமாக அமையும். ஒரு துளி கவர்ச்சி இல்லாமல் அவ்வளவு வெயிட் ஆன ரோல் அவருக்கு. காதலியாக, மனைவியாக, அதிகாரியாக நடிப்பில் மெருகேற்றியுள்ளார். வங்கி அதிகாரியான பாரதியை காதலிக்கும் கமலக்கண்ணன் எப்படி குடும்பத்தின் சம்மத்துடன் போராட்டங்களுக்கு (மனுஷன் காதலுக்காக உண்ணாவிரதம்லாம் இருக்காரு) மத்தியில் கரம்பிடிக்கிறார், திருமணம் ஆனப் பாரதிக்கு வரும் புது பிரச்னை, அவற்றை எப்படி சமாளிக்கிறார்கள், மனைவிக்காக உதயநிதி எப்படி உருகுகிறார் என காட்சிகள் விரிகிறது.

உதயநிதியின் அப்பத்தாவாக வடிவுக்கரசி (மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்) கண்டிப்புடனும், தாய்க்கு தாயாக வளர்த்த பேரனின் காதல் குறித்து அறிந்தும் கொஞ்சம் வில்லத்தனம், நிறைய பாசத்துடன் மண் வாசம் மாறாத அப்பத்தாவாக கண் முன் நிற்கிறார். இதேபோல் உதயநிதியின் அப்பா கேரக்டரில் நடித்துள்ள பூ ராம், தோழி கேரக்டரில் நடித்துள்ள வசுந்தரா எனப் படம் முழுக்க நல்லவர்கள் சூழ் உலகாகவே கேரக்டர்களை தனக்கே உரிய பாணியில் வடிவமைத்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. துணை நடிகர்களாக வருபவர்கள் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர்.

கேர்கடர்கள் எப்படியோ அதேபோல் தான் வசனங்களும். இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், தொழிலாளர்களின் உழைப்பு கஷ்டம், நீட் தேர்வு என தமிழகத்தின் தற்போதைய நிலைகளை எளிமையான வசனங்களாகவும், காட்சிகளாக அமைத்ததில் வெற்றிபெறுகிறார் இயக்குனர். ஆனாலும் படம் முழுக்க வரும் கேரக்டர்கள் எல்லாம் நல்லவர்களாவே இருந்தாலும், அதுவே ஒருவித சலிப்பையும் ஏற்படுத்துகிறது. நீர் பறவை, தர்மதுரை படங்களை ஒப்பிடுகையில், `கண்ணே கலைமானே'வில் உள்ள லாஜிக் மீறல்கள் யூகிக்க கூடிய காட்சி அமைப்புகள், காட்சிக்கு காட்சி உள்ள கருத்துகள் என எல்லாம் சேர்ந்து ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது எனத் தோன்ற வைக்கிறது. இருப்பினும் யதார்த்த, கிராம வாழ்வியலை மீண்டும் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

ஜலந்தர் வாசன் கேமரா கண்கள் இயற்கை எழில் கொஞ்சும் சோழவந்தானின் அழகை கனகச்சிதமாக கண்கள் குளிரும்படி காட்சிப்படுத்தியுள்ளது. அதேபோன்ற யுவன்சங்கர் ராஜாவின் இசையும். காட்சி அமைப்புகளை பின்னணி இசை மூலம் வலு சேர்த்திருக்கிறார். பின்னணி இசைக்கென மெனக்கெட்டிருக்கும் யுவன் ஒரு சில பாடல்களை மட்டுமே முணுமுணுக்கும் படி செய்துள்ளார். தர்மதுரையில் கிளிக் ஆனது யுவனுக்கு இந்தப் படத்தில் மிஸ் ஆகிவிட்டது (என்ன ஆச்சு யுவன் நல்லாதானே போய்ட்டு இருந்தது). ஒரு சில லாஜிக் மீறல்கள், சில இடங்களில் தொய்வு என்பதை தவிர்த்துவிட்டு குடும்பம் குடும்பமாக ரசிக்கக்கூடியது தான் இந்த `கண்ணே கலைமானே'.

You'r reading `நல்லவர்கள் சூழ் உலகு விவசாயமே அழகு - `கண்ணே கலைமானே படம் விமர்சனம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை