கமல்ஹாசன் தனது சொந்த ஊரையே பார்த்ததில்லை என்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் விஷாலுக்கு கையெழுத்து போட 10 பேர் கூட இல்லை என்றும் ராதாரவி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி, “ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்தவர்கள், தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் தெரிந்து கொள்ளட்டும்.
ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை. ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.
விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 ஓட்டு என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கமல், ‘நாளை நமதே’ என தொடங்கி பிரசாரம் செய்ய உள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்ததில்லை. முதலில் அவர், அதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.