ஏங்கிய தருணங்கள்... கண்கலங்கிய அருண்விஜய்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியான படம் தடம். இப்படம் குறித்த இரண்டு செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

arun vijay

தடையறத்தாக்க படத்துக்குப் பிறகு மகிழ்திருமேனி - அருண்விஜய் கூட்டணியில் இரண்டாவது படம் தடம். இப்படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்யா ஹோப், ஸ்மிருதி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அருண்விஜய்யே தயாரிக்கவும் செய்திருந்தார். தவிர, அருண்விஜய் முதன்முறையாக இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார். பல படங்கள் நடித்துவிட்ட அருண்விஜய்க்கு, இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வசூலை ஈட்டித்தந்திருக்கிறது இந்த தடம்.

தமிழகத்தில் மட்டும் எப்படியும் எட்டு கோடி வரை வசூலித்திருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. தவிர, இரண்டு வாரங்கள் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் தனியார் விடுதி ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்து வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த பார்ட்டியில் அருண்விஜய், மகிழ்திருமேனி, நடிகர் ஃபெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அருண்விஜய் பேசும்போது, “ சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் உடனடியான வெற்றி எனக்கு கிடைக்கவில்லை. இவன் வேலைக்கே ஆகமாட்டான் என்று பலரும் என் முகத்தின் முன்னாடியே பேசியிருக்கிறார்கள். விடாமுயற்சியோட பல வருடம் போராடியிருக்கேன். இத்தனை வருட போராட்டத்துக்கு இப்போ தான் பலன் கிடைச்சிருக்கு. இப்படியான ஒரு தருணம் என் வாழ்க்கையில் வராதானு கூட ஏங்கியிருக்கேன்” என கண்கலங்கிய படியே பேசியிருக்கார் அருண்விஜய். முதிர்ச்சியான அவருடைய பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்களும் உணர்ச்சி ததும்ப அமர்ந்திருந்தனர்.

மற்றொரு செய்தி என்னவென்றால், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தடம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததனால், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவிகிஷோர் இதன் தெலுங்கு உரிமையைப் பெற்றிருக்கிறார். அருண்விஜய் கேரக்டரில் ராம் பொத்தனேனி நடிக்கவிருக்கிறார். தவிர படத்தினை பூரிஜெகன்நாத் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் நடித்த தன்யா ஹோப் தான், தெலுங்கிலும் நடிப்பார் என்று தெரிகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்