தமிழ் சினிமா உலகில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டில் ஈடுபட்ட சினிமா பைனான்ஸியர் போத்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் இரு மகன்களும் கூட கைது ஆகியுள்ளனர்.
சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் செந்தில் கணபதி, சினிமா பைனான்ஸியர் முகுந்ச்ந்த் போத்ராவிடம் 83.30 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். பல லட்ச ரூபாய் வட்டியாக செலுத்தியும் வந்திருக்கிறார். முகுந்சந்த் அவரின் மகன்கள் சந்தீப், ககன் ஆகியோர் கூட்டு வட்டியாக 4.24 கோடி தர வேண்டுமென செந்தில் கணபதியை மிரட்டியிருக்கின்றனர்.
அவரின் ஹோட்டலை அபரிகரிக்கும் நோக்கத்துடுன் 98 சதவிகித பணம் கொடுத்து வாங்கிவிட்டதாக ஆவணம் தயாரித்து, பத்திரிகைகளில் விளம்பரமும் செய்துள்ளனர். இது தொடர்பாக செந்தில் கணபதி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் முகுந்சந்த் போத்ரா அவரின் மகன்கள் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சவுகார் பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் போத்ரா, சினிமா படம் எடுக்க கடன் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டவர். படம் ரிலீஸ் செய்யும் நிலையில் கடன்தர வேண்டுமென கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படம் வெளியீடுவதை தடுப்பார். நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் வட்டியுடன் பல கோடி வசூலிப்பார் .இவரின் பண வேட்டைக்கு நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூட சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.