பெண் சிஷ்யைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா அமைப்பின் தலைவர் கும்ரீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு கும்ரீத் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐக்கு பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, அவருக்கு பெண் ஒருவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இந்த வழக்கு தொடரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கும்ரீத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் ஹரியானாவில் பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் உடைக்கப்பட்ட, பேருந்துகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாமியார் ராம்ரஹீம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா என்ற இடத்தில் மிக பிரமாண்டமாக இவரின் ஆசிரமம் அமைந்துள்ளது. படங்களிலும் நடித்துள்ளார். தன்னை மனிதக்கடவுளாகவே சித்தரிக்த்துக் கொள்வார். சீக்கிய மதத்தின் குருகோவிந்தை கேலி செய்து சீக்கிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தினார். அரசியல் சாயமும் உண்டு. 2007ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர், பாரதிய ஜனதா கட்சி பக்கம் சாய்ந்தார்.
அவரின் இரு சிஷ்யைகளை புனிதமாக்குவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாக இவர் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. சி.பி.ஐயின் விசாரணையில் அந்த பெண்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பின், வன்முறை டெல்லி வரை பரவியுள்ளது. ஹரியானாவில் ரோடக் மாவட்டம் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டர் ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.