வைரல் நாயகன் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் திரைப்படங்களில் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை சரவணா ஸ்டோர்ஸ் தான் பாமர மக்களின் ஷாப்பிங் மால். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. குறிப்பாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த விளம்பரங்கள் செம வைரல்.
சென்னை அண்ணா நகரில், சரவணா ஸ்டோர்ஸின் `தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ கிளை 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல ரீச் கிடைத்தது. சரவணன் அருள், அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார்.
தற்போது, திரைப்பிரபலங்கள் இல்லாமல் சோலோ பெர்ஃபாமென்ஸ் கொடுக்கிறார் சரவணன். கோடை விற்பனைக்காக எடுக்கப்பட்ட சமீபத்திய விளம்பரத்தில், திரைப் பிரபலங்கள் இல்லை. ஆறு கெட்டப்பில் சரவணன் அருள்... குழந்தைகள் பட்டாளம்... ஃபாரின் அழகிகள்... டக்கரு டக்கரு பின்னணி இசை எனப் புதிய வடிவில் உருவாகியது. இதனையடுத்து சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதில் ஆர்வம் இல்லை என்று கூறி வந்தார். தற்போது நாயகனாக முடிவு செய்துவிட்டார். இதற்காக கதை கேட்கும் பணிகள் தொடங்கிவிட்டது. அவருக்கு பிடிக்கும் கதையில் நடிக்க 2020-ம் ஆண்டு முடிவு செய்துள்ளார். ஆனால், தற்போதே இதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம்.