ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் ஷாக் ஒன்றை கொடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அஜிங்கியா ரஹானே செயல்பட்டு வந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ராஜஸ்தான் அணி நிர்வாகம். ரஹானேவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்துவரும் போட்டிகள் அனைத்துக்கும் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்பட்டது. இவரின் நீக்கம் ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2017-ம் ஆண்டு தொடரில் செயல்பட்டார். பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டு விளையாட தடை பெற்றதால் அந்த பொறுப்பு ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. ஒருவருட தடையில் இருந்த ஸ்மித் தடை முடிந்த பின் ராஜஸ்தான் அணிக்காக மீண்டும் களமிறங்கினார். ரஹானே தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் செயல்பாடுகள் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளையை சந்தித்து வருகிறது ரஹானே தலைமை. இதனால் அணிக்கு மாற்றம் தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம் அதிரடியாக ரஹானாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை அமர்த்தியுள்ளது.
அதேபோல் எப்பவும் ஓப்பனிங் இறங்கும் ரஹானே கடந்த பஞ்சாப் உடனான போட்டியில் திரிபாதியை ஓப்பனிங் இறக்கினார். கூடவே ரஹானே நான்காவது வீரராக களமிறங்கி 21 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெற்றிபெற வேண்டிய அந்த மேட்ச்சில் ரஹானேவின் நடவடிக்கையால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்ற விமர்சனம் எழுந்தது. இதுவும் அவரது நீக்கத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. மாற்றம் கண்ட முதல் போட்டிலேயே அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஸ்மித். ஆனால் இது நீட்டிக்குமா எனத் தெரியவில்லை. காரணம் மே 1ம் தேதிக்குப் பிறகு ஸ்மித் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ளார். அதுவரை வெறும் 5 போட்டிகளுக்காக ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் செய்தி.