அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு முன்னதாக கமீட் செய்திருந்த ஓரிரு படங்களை முடித்துக் கொடுத்த நடிகை ஷாலினி, பின்னர் குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.
அஜித் – ஷாலினி ஜோடிக்கு திருமணம் ஆகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. சமூக வலைதளத்தில் தல ரசிகர்கள் அஜித் – ஷாலினி திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் HappyWeddingDayAjithShalini என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி அஜித் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அஜித் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் 100 நாட்களை கடந்த நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.