சென்னை தாம்பரம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் பேராசிரியர் சாலை அருகே ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. இங்குள்ள ஏரியில் 7 முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏரி அருகே ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏரியில் இருந்து 6 அடி நீளம் உள்ள முதலை ஒன்று அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள், முதலையை பிடிக்க போதுமான ஆட்கள் இல்லை என்று கூறி விட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கம்பி மற்றும் கயிறுகள் மூலம் பல மணி நேரம் போராடி முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கிருந்து வரும் பறவைகள் முதலைகுட்டிகளை எடுத்து வந்து இங்குள்ள ஏரிகளில் போட்டு விடுகின்றன. சில வருடங்களில் அந்த முதலைகுட்டிகள் பெரிதாகி இந்த ஏரியிலேயே வாழ்ந்து விடுகின்றன.
இரவு மற்றும் பகல் நேரங்களில் ஏரியில் இருந்து வெளிவரும் முதலைகள் பொதுமக்கள் செல்லும் சாலையில் படுத்துக்கொண்டும், சாலையோரம் உள்ள செடிகளின் மத்தியிலும் மறைந்து இருக்கின்றன. அந்த வழியாக செல்லும் கால்நடைகளை தாக்கி முதலைகள் தங்கள் பசியை போக்கிக்கொள்கின்றன. இதனால் பகல் மற்றும் இரவுநேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமாக உள்ளது.
தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் சிறுவர், சிறுமிகள் தெருக்களில் விளையாடி வருகிறாாகள். முதலைகளால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஏரியில் துணி துவைப்பதற்காக பெண்கள் செல்லும்போதும் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது. தற்போது ஏரி மற்றும் குட்டைகளில் தண்ணீர் குறைந்துள்ளதால் அதில் உள்ள முதலைகளை பிடிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.