பிரதமர் நரேந்திர மோடியை அக் ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாக சாடியுள்ளார் நடிகர் சித்தார்த்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணல் பற்றின விவாதங்கள் ட்விட்டரில் களைகட்டியுள்ளது. மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் அக் ஷய் குமார் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.கூடவே, சர்ச்சை எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்ட, மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சி என்று சொன்னாலும்கூட அரசியல் தழுவல்கள் இருந்தது. அதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இந்நிகழ்ச்சியைக் கிண்டல் செய்து சாடி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சித்தார்த்தும் இணைந்து கொண்டார்.
எப்போதும், ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அரசியல் சார்ந்த பேட்டிகள், ட்வீட்கள் போன்றவற்றுக்கு 'டக்குனு' பதிலடி கொடுத்துவிடுவார். அரசியல் தொடர்பான தனது கருத்துகளை பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. இந்நிலையில், நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், ‘வில்லனாக அக் ஷய் குமார் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளார்’ என பிரதமர் மோடியை அக் ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாக கிண்டல் அடித்து ட்வீட் செய்திருக்கிறார் சித்தார்த்.
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெயருக்கு முன்னாள் காவாளர் (சவுக்கிதார்) என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டதற்கு, ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுக் கடுமையாக கலாய்த்திருந்தார் சித்தார்த்.