தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது விஷாலுக்கு விழுந்த மிகப்பெரிய அடி.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் இம்முறை விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதிரடியாக ஏதேதோ செய்து வந்தார் விஷால். அரசியலில் வேறு பிரவேசிக்க திட்டமிட்டு ஆர்.கே.நகர் தேர்தலுக்கு குறி வைத்தார். ஆனால் எதுவும் கூடி வரவில்லை. இதனிடயே சங்க கட்டட்டத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விட்டார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கணக்கு வழக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காமல் இருந்தது போன்ற புகார்கள் அடுத்தடுத்து எழுந்ததைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
விஷால் நிர்வாகத்தின் மீது வெளியானப் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளின் அடிப்படையில், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்பித்தது. அரசு அந்த அறிக்கையின் படி விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பியது. விளக்கம் கொடுக்க 30 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, விஷால் தரப்பினர் அளித்த பதில் ஏற்கத்தக்கதாக இல்லை எனக்கூறினர். விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தைக் கலைத்தும் சங்க நிர்வாகங்களை இனிக் கவனிக்க என்.சேகர் என்ற அதிகாரியையும் நியமித்துள்ளது. இனி சங்கத்து சார்பில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் அவரது மேற்பார்வையில் தான் நடைபெறும். இது விஷால் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு.