பிசாசு, துப்பறிவாளன் என்று முற்றிலும் இரண்டு வெவ்வேறு கதைக்களங்களில் விளையாடி, வெற்றிவாகை சூடிய மிஷ்கின், மீண்டும் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். துணைக்கு இயக்குநர் ராம் மற்றும் பூர்ணாவையும் சேர்த்துக் கொண்டு ஒரு அவுட் அண்டு அவுட் காமெடி - டிராமா படத்தைக் கொடுத்துள்ளார். திரைக்கதை, தயாரிப்பு ஆகியவற்றைத் தானே கவனித்துக்கொண்டு, ஜி.ஆர்.ஆதித்யாவிடம் இயக்கும் பொறுப்பை மட்டும் தந்திருக்கிறார் மிஷ்கின். ஆனால், படம் முழுவதும் `மிஷ்கின் பாணி’ ஒரு ஃப்ரேமில் கூட விலகாததால், `இது அவர் படம்தான்’ என்பதை ஒரேயொரு சீன் பார்த்தாலே சொல்லிவிட முடிகிறது. ஆதித்யா தனக்கான ஒரு படத்தை எடுக்கும் வரை, தனித்துத் தெரிய வாய்ப்பில்லை.
தான் முன்னர் செய்த குற்றத்துக்காக சில ஆண்டுகள் சிறையிலிருந்த ரௌடி மங்கா, பிணையில் வெளியே வந்துள்ளான். பெயில் காலத்தின்போதும், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என்றே அலைந்து கொண்டிருக்கிறான். பெயில் காலத்தின் கடைசி நாளில், தன் குழுவினருடன் காரில் சுற்றிக் கொண்டிருக்கிறான் மங்கா. தன் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் மச்சானின் ரகசிய திருமணத்தை நடத்திவைக்க சென்று கொண்டிருந்த 'பார்பர்' பிச்சையின் பைக் மீது மங்காவும் அவனது நண்பர்களும் வந்த கார் மோதுகிறது. பிச்சை கடுங்கோபத்துடன், காரில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.
காரில் இருப்பவர்களும் பதிலுக்கு வசை பாடுகிறார்கள். இந்த சண்டையின்போது மங்கா, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறான். இந்த சமயத்தில், வேறொரு கார் மங்காவின் கார் மீது மோதுகிறது. இதனால், பிச்சையின் கை மங்காவின் வாயை பதம் பார்க்கிறது. இதை மங்கா அறியும் முன்னரே பிச்சை அங்கிருந்து குடும்பத்துடன் ஜூட் விடுகிறான். ஆனால் ரௌடி மங்கா, பிச்சையைப் பழி வாங்கியேத் தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு துடிக்கிறான். அதற்காக அவனைத் தேடி அலையோ அலை என்று அலைகிறான். அப்படி அலையும் மங்கா, பிச்சையைப் பிடிக்கிறானா என்பதும், பிச்சையைப் பிடித்த பின்னரான அவனது செயலும்தான் கலகலப்பான சவரக்கத்தியின் மீதி கதை.
பிதுங்கும் கண்களுடனும் முரட்டுத்தனமான உடல் மொழியுடனும் படம் முழுக்க அந்தர் மாஸ் காட்டுகிறார் `ரௌடி மங்கா’ மிஷ்கின். அதுவும் அவரின் இன்ட்ரோ காட்சிகளில் தெறிக்கவிடுகிறார்.
முடி திருத்தம் செய்யும் பிச்சையாக வரும் இயக்குநர் ராம், அவரது படங்களில் வரும் ஹீரோக்களுக்கு நேர்மாறான ஒரு கதாப்பாத்திரத்தில் தோன்றி, அதற்கு நியாயமும் சேர்த்துள்ளார். எந்த இடத்திலும் இயக்குநர் ராம் ஆகத் தெரியாமல், பிச்சையாகவே தெரிந்துருப்பதால், நடிப்பில் அவருக்கு பாஸ் மார்க்குக்கு மேலேயே கொஞ்சம் போடலாம்.
பிச்சையின் மனைவி சுபத்ராவாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு இந்தப் படம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கு கைக் கொடுக்கும். பிரசவ வலி வந்ததாகத் துடித்து மங்காவையும் அவனது கேங்கையும் சுபத்ரா ஏமாற்றும் சீனில், ஏமாறுவது அவர்கள் மட்டுமல்ல ஆடியன்ஸும்தான். இந்த மூன்று கேரக்டர்களைச் சுற்றித்தான் படத்தின் பிரதான காட்சிகள் இருந்தாலும், சிறு வேடத்தில் நடித்திருக்கும் `மங்கா கேங்’ பாத்திரங்கள், பிச்சை - சுபத்ரா தம்பதியின் மகன் மற்றும் மகள், பிச்சைக்கு அசிஸ்டென்டான 'கொடுக்கு' எனப் பலரும் படத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுப்பதால், சீன்கள் தொய்வில்லாமல் நகர்கிறது.
ஆரோல் கொரெலியின் இசை படத்துக்கு பெரிய பலம். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்தின் வீரியத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளன. மற்ற டெக்னிக்கல் விஷயங்களிலும் சவரக்கத்தி நன்றாக கூர்படுத்தப்பட்டிருக்கிறது. திரைக்கதை ஜாம்பவான், பஞ்சமில்லாத நடிப்பை வழங்கும் குழு, வலுவான டெக்னிக்கல் டீம் என அனைத்து இருந்தும் படத்தை முழுமையான திரையனுபவமாக மாற்றத் தவறியுள்ளார்கள்.
சின்னச் சின்ன துறுத்தல்களை மட்டும் சரிகட்டியிருந்தால் சவரக்கத்தி பட்டாக்கத்தியாக வெட்டு போட்டிருக்கும். இருப்பினும், திரைக்கதையிலும் மாறுதல் களத்திலும் இந்தளவு முயற்சிகள் கூட தமிழ் சினிமாவில் வருவது அறிதாக இருப்பதால், சவரக்கத்தியை கொண்டாடித் தீர்க்கலாம். விமர்சனத்தின் டைட்டில் புரிய படத்தைப் பார்க்க வேண்டும் மக்களே…
-பரத்ராஜ்