நூறாவது போட்டியில் நூறு ரன் அடித்த முதல் இந்திய வீரர் ஷிகர் தவான். ரன் மெஷின் வீராட் கோலியின் ரன் வேட்டை

by Isaivaani, Feb 10, 2018, 21:52 PM IST
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது, தொடரை சமன் செய்ய எஞ்சிய மூன்று போட்டிகளில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது.
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது, இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு இன்றைய போட்டி 100-வது போட்டியாகும், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் சதம் விளாசினார், இதன் மூலம் இந்திய வீரர்களில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை ஷிகர் தவான் நிகழ்த்தியுள்ளார், நூறாவது போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஷிகர்.
இதுவரை உலக அரங்கில் இந்த சாதனையை எட்டு வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். தற்போது அந்த சாதனை வரிசையில் ஒன்பதாவதாக, மற்றும் முதன் முறையாக இந்திய வீரரின் பெயர் பொரிக்கப்படுகிறது.
100-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 9 வீரர்களின் விவரம்...
1)கார்டன் கிரீனிட்ஜ் - (வெஸ்ட் இண்டீஸ்), 2)கிறிஸ் கிரைன்ஸ் - (நியூசிலாந்து),
3)யூசுப் யுகானா - (பாகிஸ்தான்),
4)சங்ககரா - (இலங்கை),
5)கிறிஸ் கெயில் - (வெஸ்ட் இண்டீஸ்),
6)மார்கஸ் டிரஸ்கோதிக் - (இங்கிலாந்து),
7)சர்வான் - (வெஸ்ட் இண்டீஸ்),
8)வார்னர் - (ஆஸ்திரேலியா),
9)தவான் - (இந்தியா).
தொடர்ந்து விளையாடிய ஷிகர் தவான் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 13-வது சதம் ஆகும், மேலும் இந்த போட்டியில் விராட் கோலி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்து வருகிறார், நான்கு போட்டிகள் இரண்டு சதம், ஒரு அரை சதம் (112, 46*, 160*, 75) என மொத்தம் 393 ரன்கள் அடித்து அபார ஃபார்மில் உள்ளார். இவரது பேட்டிங் சராசரி 196.5, ஷிகர் தவானும் நான்கு போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதம் (35, 51*, 76, 109) என மொத்தம் 271 ரன்கள் குவித்து கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவரது பேட்டிங் சராசரி 90.3.
இன்றைய போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு தவான்-கோலி ஜோடி 158 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 8-வது முறையாகும். இதுவும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே இந்திய அளவில் கங்குலி-டிராவிட் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 8 முறை நூறு ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த சாதனையை தவான்-கோலி ஜோடி சமன் செய்துள்ளது. உலக அளவில் இந்த இரண்டு ஜோடிகளும் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
இதுவரை முதல் இடத்தில் இலங்கையின் தில்சன் - சங்ககரா ஜோடி 19 முறையும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் - பாண்டிங் ஜோடி 10 முறையும், நூறு ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் வைத்த ஜோடிகள் வரிசையை அலங்கரித்து வருகிறார்கள்.

You'r reading நூறாவது போட்டியில் நூறு ரன் அடித்த முதல் இந்திய வீரர் ஷிகர் தவான். ரன் மெஷின் வீராட் கோலியின் ரன் வேட்டை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை