பேச்சுரிமை என்றாலும் வரம்பின்றி பேசுவதா..? பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Ranjith controversy speech about Rajarajachozhan

Jun 24, 2019, 13:56 PM IST

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1ந்படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்கள் குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் 6 ஆம் தேதி பேசிய நிலையில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில் 11ஆம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது, ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார். அதற்கு நீதிபதி, பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு, ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அவற்றின் ஆதாரங்கள், அவர் பேசிய பேச்சின் ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

-தமிழ்

ரஜினி படத்தின் இயக்குநருக்கு தமிழிசை எச்சரிக்கை..! விளம்பரத்துக்காக பேசக்கூடாது என சாடல்..!

You'r reading பேச்சுரிமை என்றாலும் வரம்பின்றி பேசுவதா..? பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை