வாழ்க்கை அனுபவமே பாடலாக..! பல தலைமுறைகளின் மனதை கொள்ளை கொண்ட கவிஞர் கண்ணதாசன்

Tamil great poet Kannadasan birthday today, some memories about him:

by Nagaraj, Jun 24, 2019, 15:18 PM IST

ஜூன் 24: இன்று கண்ணதாசனின் 93-வது பிறந்த தினம்

காலத்திற்கும் அழியாத, மறக்க முடியாத பாடல்களை வாரிக் கொடுத்துச் சென்றவர் கவிஞர் கண்ணதாசன். இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், பல்வேறு நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி தான் கவிஞர் கண்ணதாசன். சங்க இலக்கியங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று 93-வது பிறந்த நாள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். அவருடைய இயற்பெயர் முத்தையா. சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி தம்பதியின் மகனான கண்ணதாசனுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள் ஆவர்.

அப்போதெல்லாம் செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதியினர், குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது போல கண்ணதாசனும் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்டார். அங்கு அவருக்கு நாராயணன் என்ற பெயர் சூட்டப்பட்டது. கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் படித்த கண்ணதாசனுக்கு சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம்.

பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. இதனால் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார். முதலில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி பல ஸ்டுடியோக்களின் வாசற்படிகளில் ஏறி இறங்கினார் கண்ணதாசன். ஆனால் அவ்வளவு எளிதில் வசப்படவில்லை. சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள கோவிலிலேயே பல நாட்கள் பசி, பட்டினியுடன் படுத்துக் கிடந்தார்.

பின்னர் ஒரு நிறுவனத்தில் எடுபிடி வேலை கிடைத்தது. அப்போது முதல் கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதை அச்சில் வந்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.

ஒரு நண்பரின் உதவியால் திருமகள் என்ற நாளிதழில் வேலை கேட்டு சென்றார்.அப்போது பத்திரிகையின் முதலாளி, உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது பேஷனாக இருந்ததால், சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். அது முதல் முத்தையா என்ற பெயர் கண்ணதாசனாக மாறியது.

கண்ணதாசனின் திறமையைப் பார்த்த பத்திரிகை முதலாளி, ஒருநாள் தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது கண்ணதாசனுக்கு வயது 17 மட்டும் தான் .

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய கண்ணதாசன், தனது பெயரிலேயே ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்த சமயம் பல பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்து, பல இலக்கியவாதிகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றார் கண்ணதாசன்.

இதன் பின்னர் திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர்ந்தார். அப்போது கருணாநிதியுடன் நட்பு கிடைத்தது. முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்க ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல்.

அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முழுவதுமாக ஆளுமை செய்தார் கண்ணதாசன்.

திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது. கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார். இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழியில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.

கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டதை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை.

தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட பெரிய மனிதர்கள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுயசரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை.
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது என்பார்.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்

மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான் என்றால் மிகையாகாது.

கண்ணதாசனின் பிறந்த தினமான இன்றைய தினத்தில், அவர் பிறந்த மண்ணில் பிறந்து தமிழ்த் திரையுலகில் பல காலமாக ஜொலிக்கும் கமலஹாசனும் அவருக்கே உரித்தான பாணியில் ஒரு கவிதை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் கைதாவாரா? தடையை நீடிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

You'r reading வாழ்க்கை அனுபவமே பாடலாக..! பல தலைமுறைகளின் மனதை கொள்ளை கொண்ட கவிஞர் கண்ணதாசன் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை