குங்குமம், துளசி மாடம், துலாபாரம், ஞானஒளி, தைபிறந்தால், என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற 1960, 70களில் வெளியான படங்களில் நடித்தவர் சாரதா. தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவருக்கு தற்போது 74 வயது. 1979ம் ஆண்டு புஷ்யராகம் என்ற மலையாள படத்தில் நடித்தார் சாரதா. இப்படத்தை ஆண்டனி என்பவர் தயாரித்திருந்தார். ஆனால் அப்படத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னை காரணமாக பேசியபடி சாரதாவுக்கு முழு சம்பளமும் அவரால் தரமுடியவில்லை. 40 வருடங்கள் கழித்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார் தயாரிப்பாளர்.
வாழ்வில் தான் பட்ட கடன்களையெல்லாம் அடைத்து முடித்தவர் சாரதாவுக்கு தனது படத்தில் நடித்தபோது தர வேண்டிய சம்பளபாக்கியை தர ஆண்டனி முன்வந்தார்.
கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சாரதா வருவதை அறிந்து அவரை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஆண்டனி 40 வருடத்துக்கு முந்தைய சம்பள பாக்கிபற்றி குறிப்பிட்டு அதனை அவரிடம் வழங்கினார்.
ஆண்டினி சம்பள பாக்கி பணத்தை தந்தபோது வாங்க மறுத்தார் சாரதா. ஆனால் அதை ஏற்காவிட்டால் நான் மனம் வருந்துவேன் என்று தயாரிப்பாளர் கூறவே அதை வாங்கிக்கொண்டார்.
நடிகை சாரதா 3 முறை தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.