பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் குப்பத்து பெண்ணாக அறிமுகமாகி மனதை கவர்ந்தவர் நந்திதா. இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், நலனும் நந்தினியும், புலி, தேவி 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அட்டகத்தி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய 2 படங்கள் தவிர வேறு எதுவும் அவருக்கு பேர் சொல்லும் படமாக அமையவில்லை. தற்போது தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக நந்திதா சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
பெண் போஸீஸ் அதிகாரியாக 'ஐபிசி 376' என்ற படத்தில் நடிக்கிறார் நந்திதா. இது ஆக்ஷன் ஹீரோயினாக கதாபாத்திரம். கே.தில்ராஜ் ஒளிப்பதிவு. எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தில் விஜயசாந்தி அதிரடி போலீஸாக நடித்தது போல் இப்படத்தில் நந்திதா அதிரடி போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக சண்டை பயிற்சி பெற்று ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது,'இதுவரை நான் நடித்த வேடங்களில் இது முற்றிலும் புதியது. 4 சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது சில சமயம் கீழே விழுந்து அடிபட்டதில் ரத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் அளித்த தைரியம் என்னை பயந்துவிடாமலும், டூப் போடாமலும் நடிக்க வைத்தது.
இதுவொரு சஸ்பென்ஸ் ஹாரர் படம். ஐபிசி 376 என்ற பட டைட்டில், பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. சென்னை ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் படம் உருவாகிறது.