கே.பாலசந்தர் மருமகள் நடிகை ஆனார்.. காரைக்குடி கட்டில் படத்தில் நடிக்கிறார்..

by Chandru, Dec 3, 2019, 18:23 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர், நடிகைகளை அறிமுகப் படுத்தி அவர்களுக்கு காட்பாதராக இருந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். அவரது இல்லத்திலிருந்து இதுவரை யாரும் நடிப்பு துறைக்கு வரவில்லை. தயாரிப்பு துறையில் மட்டுமே மகன், மகள் போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதன்முறையாக இப்போது, பாலசந்தரின் இல்லத்திலிருந்து அவரது மருமகள் கீதா கைலாசம் நடிக்க வந்திருக்கிறார். பாலசந்தர் பள்ளியில் படித்த இ.வி.கணேஷ் பாபு இயக்கி நடிக்கும் கட்டில் என்ற படத்தில் அவரது தாயாக நடிக்கிறார் கீதா கைலாசம்.
சினிமாவில் நடிக்க வந்ததுபற்றி கீதா கைலாசம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
நான் சி ஏ பட்டப்படிப்பு படித்ததால் எங்களது பட நிறுவன கணக்கு வழக்குகளை கவனித்து வந்தேன். இதற்கிடையில் எனக்கு கதை எழுதும் ஆர்வம் இருந்தது. சில கதைகள் எழுதி உள்ளேன். யூ டியூபில் கதை சொல்லி வருகிறேன். நாடகத்திலும் நடித்திருக்கிறேன். எனது இந்த பணிகளை என் மாமானார் கே.பாலந்தர் மிகவும் பாராட்டுவார். வாயால் மட்டும் பாராட்டாமல் அந்த பாராட்டை கடிதமாக எழுதி தருவார். அதுபோல் நான்கைந்து முறை எனக்கு பாராட்டு கடிதம் எழுதி தந்திருக்கிறார்.
கட்டில் என்ற படத்தில் கணேஷ்பாபு நடிக்க கேட்டு அதில் அம்மா கதாபாத்திரம்பற்றி சொன்னார். காரைக்குடியின் பாரம்பரிய குடும்பத்தின் பின்னணியில் இக்கதை இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல வேடங்களாக வந்தால் தொடர்ந்து நடிப்பேன்' என்றார்.


More Cinema News