திரையுலகில் புதிய படங்களுக்கு போலியாக வசூலை கோடிகளில் உயர்த்தி சொல்லி கணக்கு காட்டும் டிவிட்டர் குருவிகளும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அல்சாட்டம் செய்யும் சில பிஆர்ஓக்களின் சாயமும் வெளுத்திருக்கிறது.
படத்தை டிவிட்டரில் பூஸ்ட் செய்வதாக கூறிக் கொண்டு சில டிவிட்டர் குருவிகள் கூட்டாக, கூட்டமாக சேர்ந்துகொண்டு சினிமா வட்டாரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அவர்களிடம் கொடுப்பதை கொடுத்தால் போதும் டுபாங்கூர் படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டதாக படம் வெளியான மறுநிமிடமே புரளியை கிளப்பி 5 கோடி வசூல் தொடங்கி 100 கோடி, 200 கோடி வரை வசூல் செய்ததாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
ஆனால் ஒட்டுமொத்தமான வசூல் என்னவென்றுபார்த்தால் அது தயாரிப்பாளரின் கையை கடிக்கும் அளவுக்குதான் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களும், தியேட்டர்கார்கள் இத்தனை கோடி நஷ்டம் அதை சம்பந்தப்பட்ட நடிகர், தயாரிப்பாளர் திருப்பி தர வேண்டும் என்று போராட்டம் அறிவிக்கிறார்கள்.
தீபாவளி தினத்தில் விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி இரண்டு படங்கள் திரைக்கு வந்தன. பிகில் படத்துக்கு கைதி கடும் போட்டியாக அமைந்தது. சில இடங்களில் பிகில் வசூலையும் கைதி மிஞ்சியது. ஆனால் டிவிட்டர் குருவிகள் குறுக்கிட்டு ஊத ஆரம்பித்தார்கள். ஊதி ஊதி பெருக்கி உலகம் முழுவதும் 300 கோடி வசூலித்து பிகில் சாதனை படைத்ததாக பரப்பி விட்டார்கள்.
இவர்களின் பொய் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக லாபம் கொடுத்த திரைப் படங்களின் பட்டியலில் பிகில் படத்தையே காணோம். அஜித்குமார் நடித்த விசுவாசம், கார்த்தி நடித்த கைதி, ஜெயம் ரவியின் கோமாளி, தனுஷ் நடித்த அசுரன், அருண் விஜய் நடித்த தடம், ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்கேஜி ஆகிய 6 படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.