பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா பிரபலமாக பேசப்பட்டார். ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் அவருக்கு தனியாக மன்றம் அமைத்தனர். அவரைப் பற்றி இணைய தளத்தில் தவறான தகவல் வந்தால் உடனடியாக ஓவியா ஆர்மி அதற்கு பதிலடி தந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு '90 எம்எல்' அடல்ட் காமெடி படத்தில் ஓவியா நடித்திருந்தார். இதில் ஆபாச வசனங்கள் பேசி நடித்தார். இதனால் அவரது இமேஜ் பாதித்தது. பட வாய்ப்புகளும் குறைந்தன. முன்னணி நடிகைகள் பட்டியலில் ஓவியா இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல் தனது கருத்துக்களையும், கவர்ச்சி படங்களையும் இணைய தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஓவியா. நெட்டில் பிஸியாகவே இருக்கிறார்.
'வாழ்க்கைக்கு அர்த்தமில்லை' என்ற ஒரு பதிவை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஓவியா ஏதோ சோகத்தில் இருக்கிறார். அதனால்தான் விரக்தியாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார் என்று எண்ணினர். அவருக்கு ஆறுதல் கூறத் தொடங்கினர். 'கவலை வேண்டாம், நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடியவிரைவில் சரியாகிவிடும்' என தெரிவித்திருந்தனர்.
இந்த மெசேஜ் ஆறுதலுக்கு பதில் ஓவியாவுக்கு அதிர்ச்சியை தந்தது. தனக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் இப்படியொரு ஆறுதலா என திடுக்கிட்டார். ஆறுதல் கூறிய ரசிகர்களுக்கு பதில் அளித்த ஓவியா 'அடப் பாவிகளா.. நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.