வேற்றுலகத்தில் வாழும் உயிரினங்களை ஏலியன் (வேற்றுகிரகவாசிகள்)என்று குறிப்பிடுகின்றனர். அவ்வப்போது பறக்கும் தட்டில் ஏலியன் நமது பூமியை நோட்டம் விடுவதாகவும், அடிக்கடி ரகசியமாக வந்து செல்வதாகவும் வேற்றுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் யாரும் செல்லமுடியாதளவுக்கு ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அங்கு அடிக்கடி வேற்றுலகவாசிகள் வந்து செல்வதாக ஏலியன் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்துதெரிவிக்கின்றனர். இதுதொடர்பான திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கிறது. ஈடி என்ற படம் அப்படியொரு படமாக உருவானது. அதன்பிறகு மென் இன் பிளாக் படம் ஏலியனை துரத்தும் கதையாக உருவானது. பின்னர் நிறைய படங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேற்றுலக வாசிகள் பூமியில் தங்கி மனிதர்களோடு மனிதர்களாக வாழ்வதாகவும் கூறுகின்றனர். அப்படியொரு கதையாக உருவாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்'. டைம் மிஷினை வைத்து காலத்தை கடந்து முன்னோக்கி, பின்னோக்கி செல்லலாம் என்ற கருவுடன் இன்று நேற்று நாளை என்ற மாறுபட்ட படத்தை இயக்கிய ரவிகுமார் அயலான் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது. அதில் ஏலியனும், சிவகார்த்திகேயனும் லாலிபாப் சாப்பிடுவதுபோல் வெளியிடப்பட்டது. மனிதர்களுடன் ஏலியன் வாழ முடியுமா அதன் குணாதசியம் மனிதனைபோன்றே இருக்குமா என்பதெல்லாம் படம் வெளிவரும்போது தெரியவரும்.