கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பூந்தமல்லியடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை ஷங்கர் படமாக்கிக்கொண்டிருந்தார். இதற்காக ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. அதில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர். கமல், காஜல், ஷங்கர் மூவரும் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.
விபத்து தொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளது. இன்று டைரக்டர் ஷங்கரை காவல் ஆணையர். அலுவலகத்துக்கு அழைத்து மத்திய போலீசார் விசாரணை நடத்தினார். அடுத்த கமல் உள்ளிட்ட பட தரப்பினரிடம் விசாரணை நடக்கவுள்ளது. இந்நிலையில் கமலுக்கும், பட தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கமல்ஹாசன் லைகா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'படப் பிடிப்பு நேரத்தில் பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு முற்றிலும் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் முதல் கடைசியாக பணியாற்றும் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கமலின் பதில் அளித்திருக்கும் லைகா நிறுவனம் ,' இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் குறை எதுவும் வைக்கவில்லை. விபத்து நடந்தால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் மட்டுமே காரணம் அல்ல. படப்பிடிப்பு தளம் என்பது உங்கள்( கமல்ஹாசன்), இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே விபத்து நடந்தால் அதற்கான பொறுப்பை நீங்களும் ஏற்க வேண்டும். தற்போது நடந்த விபத்துக்குக் கமலும் ஷங்கர் இணைந்து அனைவருமாகப் பொறுப்பு ஏற்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.