நடிகை சுஹாசினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திகில் படம் சிவகாமி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பித்தால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றார்.
அவர் பேசியதாவது: நான் ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று ராதாரவியிடம் சொன்னேன் ஏண்டா இப்படி பண்ற வேற உருப்படியாக எதாச்சும் வேலை செய் என்றார். அவர் பேச்சை கேட்காமல் லத்திகா எடுத்தேன் அந்த படம் நானூறு நாள் ஓடிச்சு. அதன்பிறகு அன்புத்தொல்லை என்ற படம் எடுத்தேன். பப்ளிசிட்டி கிடைத்தது. ஆனால் இதற்காக 40 கோடி கையைவிட்டு போச்சு. பின்னர் காமெடி நடிகனாகிவிட்டேன். சிவகாமி படத்தின் டிரெய்லர், பாடல்கள், இசை எல்லாம் தியேட்டரை அதிர வைத்தது.
கூடிய விரைவில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் என்னை சேர்த்துக்கொள்ள வேண்டும். எனக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும். அப்படியில்லை என்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் அவர் வந்து இணைந்து கொள்ளட்டும். சினிமா ஒரு கடல். நீச்சல் அடித்துப் பிழைத்தவர்கள் குறைவு, மூழ்கி போனவர்கள் ஏராளம். நல்ல உழைப்பைக் கொடுத்து நடியுங்கள் பிரபலமாகுங்கள். சினிமாவில் நுழைய நினைப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை இதுதான்' என்றார் பவர் ஸ்டார்.