பிகில் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், கைதி பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
கைதி ரிலீஸுக்கு முன்பே மாஸ்டர் படத்தின படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் தொடங்கிவிட்டார். டெல்லி, மைசூர், சென்னை, நெய்வேலி போன்ற இடங்களில் 3 கட்டங்களாக நடந்த படப்பிடிப்பில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. முழுமையாகப் படப்பிடிப்பு முடியாத நிலையில் இப்படத்திற்கு டப்பிங் பேசும் பணியைத் தொடங்கி விட்டார் விஜய். தான் நடித்த காட்சிகளுக்கு ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் பல காட்சிகள் வசனம் பேசி இருக்கிறார்.
இப்படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று பட ரிலீஸ் தள்ளிப்போகும் என்று வதந்தி பரவியது, ஆனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று படதரப்பு உறுதி செய்திருக்கிறது. இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி வைரலானது. படத்தில் இப்பாடல் பெரிய ஹைலைட் டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.