ஆண்ட்ரியா நடிக்க ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்குச்
சுகாதார கருவிகளை வழங்கினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிப் பேசியதாவது இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமாகப் பாதுகாப்பாக இருப்போம்.
நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங் கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.
ஆனால், சென்ற வாரம் நான் மளிகைக் கடைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும்போது நான் மிகவும் வருந்தினேன். இது போன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவைச் சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாற்றுகிறார்கள்.
ஆகையால், அவர்களுக்கு உரியச் சுகாதார கருவிகளைச் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன்.இதுபோல், உங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.